Monday, 18 March 2013

நெஞ்சிருக்கும் வரை


என் மகனை பார்க்கும் போதெல்லாம் நினைத்ததுன்டு  , இவனை கருவறையில் சுமக்கும் பாக்கியம் எனக்கு வாய்க்க வில்லையே  என்று.... பல முறை மனம் வாடியது உண்டு பெண்ணாக பிறக்கவில்லையே  என்று  . இலை மேல் தவழும் பனி துளி போல் , என் மழலை என் மடியில் களித்து மகிழும் போது இந்த  பூலோகத்தில் இதை விடவும் இன்பங்கள் உண்டோ என்று என் மனம் என்னை கேள்விகள் கேட்டதுண்டு . ஆனால் ,

நொடிக்கொரு முறை தன் முட்களை நகர்த்தும் கடிகாரம்  அதன் ஆற்றலை காட்ட , இன்று ,இதோ என் மகன் நிற்கிறான் ஒரு முழு ஆண் மகனாக. காலம் மின்னல் போல சென்றோடினாலும் என் பிள்ளையின் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் என் வாழ்கையில் அன்பால் செதுக்கபட்டது .அவ்வப்போது அதை நினைத்து பார்க்க என் விழி ஓரங்களை கண்ணீர் பதம் பார்க்கும். சிலர் கூறுவர்," வாழ்கையில் செய்த பாவங்கள் உன்னை இப்போது வாட்டுகிறது என்று ". இன்னும் சிலர் " இக்காலத்தில்  வயதான பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பெரும்  பாரம் . உன்னை வீதியில் விடாமல், அனாதை  இல்லத்தில் சேர்த்து விட்டு சென்றானே என்று மனதை அமைதி படுத்திக்கொள் ! " என்பர் . யார் என்ன கூறினாலும் என் பிள்ளையை பிரிந்து இருக்கும் வலி எனக்கு மட்டுமே சொந்தமானது . அதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் எனக்கு விருப்பமில்லை. என் சோகத்தை சொல்லி பிறரிடமிருந்து அனுதாபத்தை சேர்ப்பதும் என் குறிக்கோள் இல்லை. ஆதலால் என் கடைசி நாட்களை எண்ணி பார்க்கும் நொடிகளில் இக்காகிததில் என் துயரத்தை வார்த்தைகளில் வடிக்கிறேன். காரணம்? வார்த்தைகள் அறியாதே என் வலியை ....

 " தமிழனையும் தமிழையும்  மதிக்க தெரியாத சிலர் இத்தமிழகதில் உலா வருகின்றனர் , தமிழன் என்ற அடை மொழி சூடி. நம் செம்மொழிக்கே மதிப்பில்லாத இடத்தில் தமிழ் கற்று கொடுக்கும் என்னையா  மதிக்க போகிறார்கள்? அயல் நாட்டு ஆங்கிலம் கற்ப்பிப்பவனுக்கு  அதிக ஊதியம் , நம் மொழியை கற்பிக்கும் எனக்கோ சில்லரை காசுகள்! உதவித் தொகை கொண்டு என் செல்ல பிள்ளை படித்து முன்னுக்கு வர என் வயதும் முதிர்ந்தது. சிறு வயதில் தட்டி கழிக்க முடிந்தது , இப்போது இயல வில்லை "அம்மா எங்கே ? " என்று அவன் கேட்கும் போது!  ஒரு நாள் ......


"அம்மா எங்கே ? என்ன ஆனார்கள் ? எனக்கு பதில் சொல்லுங்கள் அப்பா!" என்று என் மகன் தொடங்க  , எங்களிடையே விவாதம் உச்ச கட்டத்தை எட்டியது. கருவிழிகளில் ஆயிரம் சோகங்கள், பல கேள்விகள், பல பதில்கள் . பாவம் என் பிள்ளைக்கு தெரியவில்லை அதை உணர! என் உதடுகள் அமைதி காத்தன . அவனின் இளம் இரத்தம் கொதித்தது. அம்பு போல் எய்திய அவன் சொற்களின்  வலிமை தாள முடியாமல் சொன்னேன்,"உன் தாய் எங்கு சென்றாள் என தெரியவில்லை, தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை! ", என்று. "மனிதர்களின் மதிப்பை அறியாத உங்களை போல் மிருக ஜாதிகள் எப்படி ஆசிரியராக பதவி வகித்தீர்கள் ? அதும் தமிழ் ஆசிரியராக! என் மொழிக்கே ஏற்பட்ட அவமானம் இது!" என கூச்சலிட்டான். ஆத்திரம் அடக்க முடியாமல் நானும் பதிலுக்கு கூறினேன், " இனி ஒரு வார்த்தை நீ பேசினால் உன்னை செருப்பால் அடிப்பேன்" என்று . அதற்கு அவன் கூறிய பதில் என்ன தெரியுமா?

         "உழைக்காத உங்கள் கைகளால் அடி வாங்குவதை விட மேல், உழைத்து தேய்ந்திருக்கும்   உங்கள் செருப்பால் அடி வாங்குவது"
அன்று என் மகன் எனக்கு பாடம் கற்று கொடுத்தான் ,மனிதன் உழைக்கும் வரை தான் அவனுக்கு மதிப்பு என்று. " மனிதனின் மதிப்பு புரியாத உங்களுக்கு அந்த வலியை கொடுத்தால்  மட்டுமே அதை உணர்வீர்கள் " என்று என்னை தனிமை படுத்தி விட்டான் அவனிடமிருந்து! அவன் தாயை  பற்றி நான் எந்த செய்தியும் ஏன் அறிந்து கொள்ளவில்லை என்று கேள்வி தோன்றுகிறதா?? ......

....

     "ஏனெனில் அந்த பெண்ணை பற்றி அறிந்து கொள்ள , அவள் என் மனைவியும் அல்ல, நான் திருமணம் ஆனவனும் அல்ல! இந்நாட்டில் ஓர் அனாதை இருக்க கூடாது என்று நான் தத்தெடுத்த குழந்தை இன்று இங்கு என்னை அனாதையாக்கி சென்று விட்டது! மனம் உண்மையை சொல்ல துடிக்கிறது அவன் அன்பை நாடி ! அய்யஹோ! அவன் அனாதை  என்று அறிந்தால் அவன் மனம் அதை தாங்காது என்று மறுபக்கம்  பாசம் தடுக்கிறது "

   சில வலிகளுக்கு மனிதர்களால் விடை அளிக்க இயலாது! காலம் முயற்சிக்கட்டும் அதை வழங்க!




1 comment: